ஓகஸ்ட் 3 ஆம் திகதி முதல் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் கருமபீடம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார். இதன் மூலம் இதுவரை 120 வெளிநாட்டவர்களுக்கு சாரதி அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
சுற்றுலாவை ஊக்குவித்து, சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைப்பதற்காக இந்த கருமபீடம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. எனினும், கனரக வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
விசா காலத்தை அடிப்படையாகக் கொண்டு 2 முதல் 5 மாதங்களுக்குள் செல்லுபடியாகும் வகையில் தற்காலிக சாரதி அனுமதிகள் வழங்கப்படுகின்றன. நிரந்தர அனுமதிகள், வழக்கம் போல் வெரஹெர அலுவலகத்திலேயே வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2025 ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 133,678 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 100,451 மோட்டார் சைக்கிள்கள், 20,535 கார்கள் மற்றும் பல இரட்டை பயன்பாட்டு வாகனங்கள், லொறிகள், முச்சக்கர வண்டிகள் அடங்குகின்றன. வாகனப் பதிவு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றார் கமல் அமரசிங்க.
இதே நேரத்தில், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் குரல் எழுப்பியுள்ளது. சங்கத்தின் பிரதிநிதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது, சுற்றுலாப் பயணிகள் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதால் சமீப காலமாக விபத்துகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.
“வெளிநாட்டவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பியர்களாகும். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை,” என அவர் தெரிவித்தார்.
இந்த திட்டம், சுற்றுலாத்துறையில் உள்ளூர் சாரதிகள் எதிர்நோக்கும் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகவும், பலர் தங்கள் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்த திட்டம் மூலம் அரசாங்கம் எதை நோக்கி செல்ல விரும்புகிறது? இது நியாயமா?” என கேள்வி எழுப்பிய அவர், இதனை அரசு மீளாய்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்கின்றது என வலியுறுத்தினார்.