இந்தாண்டு ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, இன்று (ஓகஸ்ட் 06) நள்ளிரவுக்குப் பிறகு பரீட்சை முடிவடையும் வரை மேலதிக வகுப்புகள் மற்றும் தொடர்புடைய கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சார்த்திகளுக்காக மேலதிக வகுப்புகள், பாடவிவரங்களுக்கான விரிவுரைகள், கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள் உள்ளிட்ட அனைத்தும் நடத்துவதை திணைக்களம் தடை செய்துள்ளது.
அத்துடன், யூக வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல், அதேபோல் பரீட்சை வினாத்தாள்கள் வழங்கப்படுவதாகவோ, அதற்கு சமமான கேள்விகள் வழங்கப்படுவதாகவோ சுவரொட்டி, பதாகை, துண்டுப் பிரசுரம், மின்னணு ஊடகம் அல்லது சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பும் செயல்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகளை மீறும் நபர் அல்லது நிறுவனங்கள் தொடர்பாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலும், அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர தொலைபேசி எண் 1911 மூலமாகவும், பாடசாலை பரீட்சை மற்றும் முடிவுகள் பிரிவின் 0112 784208 அல்லது 0112 784537 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவும் முறைப்பாடுகள் பதிவு செய்யலாம் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வருடம், நாடு முழுவதும் 2,787 பரீட்சை மத்திய நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.