இளைஞர் சமூகத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதற்காக விவசாய நடவடிக்கைகளை நவீனமயப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பயிர்ச் சேதத்தின் பின்னர் இரண்டு மாதங்களுக்குள் இழப்பீடு வழங்கியுள்ளமை இதுவே முதற்தடவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்நாட்டு உற்பத்தியின் ஊடாக இரண்டு இலட்சம் மெற்ரிக் தொன்னுக்கு அதிகமான மேலதிக விளைச்சல் கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டு 04 வகையான பயிர்களை முதன்மைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். நெல் தற்போது வெற்றிகரமான நிலையை அடைந்துள்ளது.
அதனுடன் சோளம் மிளகாய் உருளைக் கிழங்கு ஆகியவற்றை பயிரிடுவதற்கு மக்களைத் தூண்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த வருடங்களை போன்று அடுத்த வருடம் முதல் முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பறவைக்காய்ச்சல் அற்ற நாடு என்ற வகையில் இலங்கைக்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்யக் கூடிய அதிக சந்தர்ப்பம் காணப்படுகிறது.
தற்போது மாலைத்தீவுக்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வதைப் போன்று அடுத்த வருடம் முதல் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியை விரிவுபடுத்த திட்டமிட்டு வருவதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.