தேர்தல் தினத்தன்று வாக்களிக்கும் நேரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமெனின் மாலை நேரத்தில் மாத்திரம் 1 மணித்தியாலம் நீடிக்காமல் காலையில் 30 நிமிடமும் மாலையில் 30 நிமிடம் நீடிக்குமாறு கபே அமைப்பு, தேர்தல் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மனாஸ் மக்கீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “சாதாரணமாக தேர்தல் தினத்தில் வாக்களிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கின்ற நேரம் காலை 7 மணி தொடக்கம் 4மணி வரைக்கும் ஆகும்.
ஆனால், இம்முறை தேர்தலானது, சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய நடத்தப்பட வேண்டி இருப்பதனால், கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாப்பு வழங்க கூடிய வகையில், ஒவ்வொரு வாக்காளரும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டி இருக்கின்றது.
இவ்வாறான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்ற போது, வாக்குகளிப்பதற்குரிய நேரம் போதுமானதாக காணப்படாததாக இருக்கும் பட்சத்தில், தேர்தல் நடத்துகின்ற நேரத்தினை அதிகரிக்க தீர்மானம் எடுப்பார்கள்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அபேட்சகர்கள் அதிகம் என்ற காரணத்தினால், குறிப்பாக வாக்குச் சீட்டின் அளவு அதிகரிக்கப்பட்டமையினால் தேர்தல் மாலை 4 மணி தொடக்கம் 5 மணி வரை நீடிக்கப்பட்டது.
கபே அமைப்பு, தங்களது கண்காணிப்பாளர்கள் ஊடாக அவதானித்த விடயம், 4 மணி தொடக்கம் 5 மணி வரைக்கும் மிகவும் குறைந்தளவான வாக்காளர்கள்தான் கடந்த தேர்தலில் வருகை தந்திருந்தனர். குறிப்பாக 4 மணிக்குள் ஏராளமானவர்கள் வாக்களித்திருந்தனர்.
இதேவேளை பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மக்களினால் அளிக்கப்படுகின்ற வாக்குகள், தொலைத்தூரத்தில் இருக்கின்ற வாக்கு எண்ணுகின்ற நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும்போது, பல்வேறு அசெகரியங்களை சந்திக்க நேரிடும்.
குறிப்பாக காட்டு யானைகளின் தொந்தரவு ஆகியவற்றின் மத்தியில் வாக்கு பெட்டிகளை கொண்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்.
கடந்த தேர்தலில் 7 மணிக்கு தேர்தல் ஆரம்பித்தாலும் பல்வேறு வாக்கு நிலையங்களிக்கு 6.30 மணியளவிலேயே வரிசையாக மக்கள் நிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
ஆகையாலேயே கபே அமைப்பு, குறிப்பாக வாக்குகளை அளிக்கின்ற நேரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்துவதாயின் காலை 6.30 தொடக்கம் மாலை 4.30 வரைக்கும் மாற்றுமாறு குறித்த ஊடக அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.