வவுனியா மாவட்ட 4 தனியார் பேரூந்துகளின் வழியனுமதிப் பத்திரம் தற்காலிகமாக ரத்து!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

வடக்கு மாகாணத்தில் பயணிகளுக்கான சேவையை முன்னறிவித்தலின்றி இடைநிறுத்தி, பொதுமக்களுக்குப் மிகப் பெரிய அசௌகரியங்களை ஏற்படுத்திய வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 4 தனியார் பேருந்துகளின் வழியனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பேருந்து நிலையத்தில் குறித்த தனியார் பேருந்துகள் தமக்குரிய சுழற்சி முறை இருந்தும், அதிகார சபைக்கு எவ்வித முன்னறிவித்தலுமின்றித் தமது சேவையைத் தன்னிச்சையாக இடைநிறுத்தியுள்ளன. இதனால், பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெருமளவான பயணிகள் ஒரு நாள் முழுவதும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன், அதிக கட்டணங்களைச் செலுத்தி மாற்றுத் தனியார் வாகனங்களில் தமது இருப்பிடங்களுக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பயணிகளை நடுத்தெருவில் விட்ட இந்தப் பொறுப்பற்ற செயல் தொடர்பில் அதிகார சபையின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராகப் பின்வரும் கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக குறித்த பேருந்து உரிமையாளர்களுக்கு தலா 3,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளின் வழியனுமதிப்பத்திரங்கள் 27.04.2026 முதல் 03.05.2026 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தடை நடைமுறையிலிருக்கும் காலப்பகுதியில், குறித்த பேருந்துகளில் பதிவு செய்யப்பட்ட சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் வழியனுமதிப்பத்திரம் பெற்று சேவையில் ஈடுபடும் வேறு எந்தவொரு பேருந்திலும் கடமையாற்றுவதற்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன்:

‘பயணிகளின் நலனே எமது முதன்மை நோக்கமாகும். தமக்கு வழங்கப்பட்டுள்ள சுழற்சி முறையில் பொறுப்பற்ற விதத்தில் சேவைகளை இடைநிறுத்தி பொதுமக்களை அலைக்கழிக்கும் இவ்வாறான செயற்பாடுகளை அதிகார சபை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. இவ்வாறான விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எவ்விதப் பாரபட்சமுமின்றித் தொடர்ந்தும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரால் வேண்டுமென்றே ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ அல்லது முறைகேடுகள் இடம்பெற்றாலோ, பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் அதிகார சபையின் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என அதிகார சபை மீண்டும் வலியுறுத்துகின்றது.

Share this Article
Leave a comment