வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட கண்காணிப்பு பயணத்தை வடக்கு மாகாண ஆளுநர் நேற்று புதன்கிழமை (03/12) மேற்கொண்டிருந்தார்
இதன்போது வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களும் வெள்ளத்தால் மிக மோசமான அழிவுகளையும், அதிகளவான உட்கட்டுமானச் சேதங்களையும் எதிர்கொண்டுள்ளன. அவற்றை நேரடியாகப் பார்வையிட்டு, மாகாண நிர்வாகத்தின் ஊடான புனரமைப்பு வேலைத் திட்டங்களை விரைவுபடுத்தி, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிப்படுத்துவதற்காகவே இங்கு வந்துள்ளேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்திருத்தார்

வவுனியா பயணத்தின்போது ஆளுநருடன் பிரதியமைச்சரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க, வவுனியா மாவட்டச் செயலர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக மாவட்டச் செயலர் நா.கமலதாசன், மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ரதீஸ் ஆகியோரும் இணைந்து பாதிப்புக்குள்ளான இடங்களைப் பார்வையிட்டனர்.
பூவரசங்குளம் நித்தியநகர் லோகேஸ்வரா வித்தியாலய நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களைக் குழுவினர் சந்தித்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள், அதிகாரிகள் வழங்கிய முன்னெச்சரிக்கைக்கு அமைவாக நாம் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்தாலும், எமது வாழ்வாதாரமான கால்நடைகளைக் கொண்டுசெல்ல முடியவில்லை. கடந்த காலங்களை விட இம்முறை திடீரென வெள்ள மட்டம் அதிகரித்தமையால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டோம் எனத் தெரிவித்தனர். இறந்துபோன கால்நடைகளைப் புதைப்பதற்கான சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.