வவுனியா மாவட்ட மக்களுக்கு covid- தடுப்பூசிகள், PCR இயந்திரமும் பெற்றுக்கொடுக்க வலுவில்லாத ஆளும் அரசியல் தலைமைகள்.
என வவுனியா நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் தெரிவித்தார்
வவுனியா வைத்தியாசலைக்கு PCR இயந்திரத்தையோ அல்லது வவுனியா மாவட்ட மக்களுக்கான Covid தடுப்பூசிகளையோ பெற்றுக்கொடுக்க வலுவில்லாத அரசாங்கமும் அவர்கள் பங்காளி கட்சிகளின் தலைமைகளும் வலுவில்லாதவர்கள் என இன்றையதினம் நடைபெற்ற வவுனியா நகரசபையின் 39வது அமர்வில் நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் தனது உரையில் மக்களின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் உரையாற்றிய போது தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில் வவுனியா மாவட்டத்தில் சடுதியாக Covid தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையிலும் திருநாவற்குளம், சகாயமாதாபுரம் முற்றாக முடக்கப்பட்டு பாரிய ஆபத்தை எதிர்நோக்கிய நிலையில் எமது மாவட்டத்தின் பல கிராமங்களில் எடுக்கப்படும் PCR முடிவுகளை யாழ்ப்பாணம், கொழும்பு, அனுராதபுரம் அனுப்ப வேண்டிய நிலைமை ஏன் வவுனியாவிற்கு ஏற்பட்டுள்ளது.
Covid தொற்றினால் வவுனியாவில் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கும் எண்ணம் கூட ஆளும் அரசியல் தலைமைகளுக்கு இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட திருநாவற்குளம், சகாயமாதாபுரம் கிராமங்கள் இன்று வரை வர்த்தமானி அறிவித்தலின்றி தனிமைப்படுத்தப்பட்டு மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள் எனவும் தெரிவித்ததோடு,
மேலும் திருநாவற்குளத்தில் 750 குடும்பங்களும், சகாயமாதாபுரத்தில் 130 குடும்பங்களும் தினந்தினம் அல்லற்படும் நிலையை பார்க்கும் பொழுதே வன்னியை ஆளும் வலுவற்ற அரசியல் தலைமைகள் வெட்கித்தலை குனியும் நிலை ஏற்பட்டுள்ளது.
எமது மக்களுக்காக அல்லும்பகலும் பாடுபடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். எனினும் இந்நிலைமைகளில் அரசுடன் பேசி முடிவெடுக்கும் வலுவுள்ளவர்கள் அக்கறையின்றி செயற்படுவது கிராம மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே வவுனியா மாவட்டத்தில் அக்கறை உள்ளவர்கள் உடனடியாக மக்களுக்கான தடுப்பூசிகளையும் பல மாதங்களாகக் கோரப்படும் PCR இயந்திரத்தையும் பெற்றுக் கொடுக்க வழிவகுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.