முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் திருவுருவச்சிலை வலிதெற்கு பிரதேச சபைக்கு அருகாமையில் இன்று (ஜனவரி 24) திறந்துவைக்கப்பட்டது.
மக்கள் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் திருவுருவச்சிலை வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் கருணாகரன் தர்சன் தலைமையில் திறக்கப்பட்டது.
புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா ஆகியோரால் தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை திறந்துவைக்கப்பட்டது.
இவர் இலங்கை நாடாளுமன்றத்தில் 1960 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றியவர்.
இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ். தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறுதிருமுருகன், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன், கட்சி முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.