வடமாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் உயிரிழந்த ஏழு பேரின் மாதிரிகளில் எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளதாக தொற்று நோயியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த தகவலை, கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதன் சமூக சுகாதார நிபுணர் டாக்டர் துஷானி பெரேரா வெளியிட்டார்.
உயிரிழந்தவர்களின் மாதிரிகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், ஆய்வுகள் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பல நோயாளிகளின் மாதிரிகள் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதென உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாதிரிகள் மீதான ஆய்வுகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீண்ட கால காய்ச்சல், கண் சிவத்தல், உடல் சோர்வு, கடும் மஞ்சள் நிற சிறுநீர், சிறுநீருடன் இரத்தம் கலத்தல் ஆகியவை எலிக்காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும்.
இவற்றில் ஏதேனும் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.