நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த வடதாரகை கப்பலின் திருத்தப்பணிகளுக்கு 40 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி தேவைப்படுவதாக பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.குடா நாட்டின் தனித்தீவாக அமைந்துள்ள நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக சேவையில் ஈடுபடவில்லை. இதனால் பயணிகள் போக்குவரத்தில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நெடுந்தீவிற்கான போக்குவரத்து சேவைகள் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள வடதாரகை மற்றும் குமுதினி ஆகிய படகுகள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் வடதாரகை பயணிகள் போக்குவரத்து படகானது நீண்ட காலமாக பராமரிப்புக்கள் எதுவும் மேற்கொள்ளப்படுவதற்கான நிதியொதுக்கீடுகள் கிடைக்கப்பெறாது பழுதடைந்த நிலையில் உள்ளது.
போக்குவ ரத்து சேவையில் ஈடுபடுத்தப்படாமல் தற்போது காங்கேசன்துறை துறைமுகத்தில் நீண்டகாலமாக தரித்துள்ளது.
கடந்த ஆண்டில் இதனை சீர் செய்வதற்கு 35.5 மில்லியன் ரூபா நிதி தேவையென மதிப்பீடு செய்யப்பட்ட போதும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை .
நீண்டகாலமாக குறித்த கப்பலை திருத்துவதற்கான நிதி கிடைக்கப் பெறாத நிலையில் தற்போது அதன் செலவுகள் மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக வடதாரகையினை மீண்டும் சேவையில் ஈடுபடச் செய்வதற்கு 40 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி தேவைப்படுவதாக நெடுந்தீவுக்கு பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நீண்டகாலமாக சேவையில் ஈடுபட்டு வரும் குமுதினிப்படகும் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வடக்கு மாகாண சபையால் சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றியிறக்குவதற்கென வழங்கப்பட்ட நெடுந்தாரகை படகு பொது மக்களின் பொதுப்போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற நிலையில் இதன் பராமரிப்பு செலவு மற்றும் எரிபொருள் செலவு அதிகளவில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(நன்றி தினக்குரல்)