இலங்கை கிரிக்கெட் அணியில் இதுவரை வடக்கு கிழக்கை சேர்ந்த வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு அரசியல் காரணங்கள் கிடையாது என்றும் , அவர்களுக்கு போதிய திறமையின்மைதான் காரணம் எனவும் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
தனியார் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்தபோது இதனை கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக தமிழர்களே உள்ளனர். யுத்தம் காரணமாக 30 வருடங்களாக அங்கு கிரிக்கெட் விளையாடப்படவில்லை. யுத்தத்திற்கு முதல் பலர் விளையாடியிருப்பார்கள் எனினும் அப்போது இலங்கை டெஸ்ட் அந்தஸ்தை பெற்றிருக்காததால் அவர்களிற்கு வாய்ப்பு கிடைக்காமலிருந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் 30 வருடங்களின் பின் விளையாடும்போது அவர்களின் திறமை கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. பயிற்சி, வசதிகள் அங்கு குறைவாக இருந்தது. வீரர்கள் திறமையை காட்டினாலும், நாட்டின் தெற்கு, மத்திய பகுதி வீரர்களை விட குறைவாக இருந்தமையினாலேயே அவர்களிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் முரளி குறிப்பிட்டார்.