வடக்கு மாகாணத்தில் பேரிடருக்குப் பின்னரான சுகாதார நடவடிக்கைகள் – ஆளுநர்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட இடர் நிலைமையைத் தொடர்ந்து, பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று திங்கட்கிழமை (01/12) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் இக்காலக்கட்டத்தில், தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பது மற்றும் சுகாதாரக் கட்டமைப்பை மீளமைப்பது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கான அடிப்படைச் சுகாதார வசதிகளை உறுதி செய்தல் மற்றும் மருத்துவ சேவைகளை ஒருங்கிணைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன், மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பும் சூழலில், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இடர் நிலைமையின் போது மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு ஏற்பட்ட பௌதீகப் பாதிப்புகள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, சில மருத்துவமனைகளுக்கான தொலைத்தொடர்பு வசதிகள் இன்னும் முழுமையாகச் சீர்செய்யப்படாமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதனைத் துரிதப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்  ப.ஜெயராணி, மத்திய சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) மருத்துவர் எஸ்.சிறீதரன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன்பத்திரன உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Share this Article