வேலணை பிரதேசத்தின் அபிவிருத்தியை மையாமாக கொண்டு வங்களாவடி நகரப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கடைத்தொகுதி அமைக்கப்படுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட தீவகப் பிரதேசத்தின் மையமாக விளங்கும் வேலணை பிரதேசத்தின் நகரமான வங்களாவடி பகுதியில் நவீன கட்டடத் தொகுதி ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கையை தற்போதைய சபையில் உறுப்பினர்கள் முன்னெடுத்திருந்துவந்த நிலையில் அதற்கான அனுமதியை சபை 2018 ஆம் ஆண்டு ஏகமனதாக நிறைவேற்றியிருந்தது.
ஆனாலும் குறித்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக இருந்துவந்த இழுபறி நிலை காரணமாக அதன் கட்டுமாணத்தில் தாமதமேற்பட்டுவந்தது.
இந்நிலையில் தற்போது உலகவங்கி குறித்த கட்டுமாணப் பணியை முன்னெடுப்பதற்கு நிதிப்பங்களிப்பு செய்ய முன்வந்துள்ளது.
இதையடுத்து இன்று (ஜனவரி 23) குறித்த நவீன கடைத்தொகுதி அமையவுள்ள நிலப்பகுதியை உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி மற்றும் செயலாளர், உறுப்பினர்கள் அதிகாரிகளுடன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
முன்பதாக வேலணை வங்களாவடி பகுதியின் அபிவிருத்தியை மையமாக கொண்டு 2018 ஆம் ஆண்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரான திருமதி அனுஷியா ஜெயகாந்த் அவர்களால் சபையில் பிரேரணை கொண்டுவரப்பட்டது.
குறித்த முன்மொழிவை பிரதேசத்தின் அபிவிருத்தி கருதி சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஏகமனதாக நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.