முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். உடல் நலக்குறைவால் தனது 92ஆம் ஆண்டில் உயிரிழந்த மன்மோகன் சிங்கின் உடல், டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.
ரணில் விக்கிரமசிங்க கடந்த ஞாயிறு (டிசம்பர் 21) தனிப்பட்ட விஜயமாக டில்லி சென்றார். அங்கு, இன்று நடந்த இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றுவதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்தச் சூழலில், மன்மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவரின் மனைவி குர்ஷரன் கௌரின் அருகில் சென்று இரங்கல் தெரிவித்தார்.
மேலும், அங்கு வந்திருந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடனும் ரணில் விக்கிரமசிங்க ஒரு சிறிய கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த உரையாடல் உத்தியோகபூர்வமல்லாமல் தற்செயலாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.