யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ நிபுணரான டாக்டர் உருத்திரபசுபதி மயூரதன் அவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்
டாக்டர் மயூரதன் அவர்கள்,யாழ் அருணோதயா கல்லூரியில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை முடித்து, பின்னர் யாழ் பரியோவான் கல்லூரியில் உயர்தரக் கல்வியை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, 18-ஆவது அணியில் மருத்துவக் கல்வியை நிறைவு செய்து, மருத்துவப் பட்டம் (MBBS) பெற்று வெளியேறினார். பின்னர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட வைத்தியத் துறையில் விசேட நிபுணர் பட்டத்தைப் பெற்று, சட்ட மருத்துவ நிபுணராக தன்னை உருவாக்கிக் கொண்டார்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சட்ட மருத்துவ நிபுணராக,பல்வேறு சவால்களும் நெருக்கடிகளும் நிறைந்த சூழ்நிலைகளிலும், தன்னுடைய கடமையை நேர்மை, பொறுப்பு மற்றும் துணிச்சலுடன் ஆற்றியவர்.
வடமாகாண நீதிமன்றம் மற்றும் காவல்துறை விசாரணைகளிலும், அறிவியல் அடிப்படையிலான தெளிவான மருத்துவக் கருத்துகளை வழங்கி, தனது தொழில்முறை திறனைச் சிறப்பாக வெளிப்படுத்தியவர்.
இத்தகைய அனுபவமும் சேவையும் கொண்ட ஒருவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டிருப்பது, மருத்துவத் துறைக்கும், கல்வித் துறைக்கும், வடக்கு சமூகத்திற்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் விடயமாகும்.