யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்திற்கு செல்லும் இளம் தாய்மார்கள் தொடர்ச்சியாக மரணமடையும் சம்பவம் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
நெடுந்தீவைச் சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகாமேரி (வயது 25) என்ற இளம் தாய் நேற்று முன்தினம் (ஒக். 09) இரவு யாழ் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது மரணமடைந்துள்ளார் பின்னர் பெண் குழந்தை உயிருடன் எடுக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த அவலநிலை?
அதேவேளை கடந்த சில நாட்களின் முன்னரும் சத்திர சிகிச்சையில் இளம் தாய் ஒருவர் யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்த சோகம் முடியுமுன்னர் மற்றுமொரு இளம் தாய் மரணமாகியுள்ளார்.
அது மட்டுமல்லாது மற்றுமொரு இளம் தாய் ஒருவர் இரட்டை குழைந்தைகளை பிரசிவித்த நிலையில் குழந்தைகள் உயிரிழந்திருந்தன. அதனை தொடர்ந்து குழந்தைகளின் தாயாரும் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் யாழில் தொடர்ந்து உயிரிழக்கும் இளம் தாய்மார்களின் உயிரிழப்புக்கள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் தொடர் உயிரிழப்புக்களுக்கு வைத்தியசாலை மருத்துவர்களின் அசமந்த போக்கே காரணம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அத்துடன் இவர்கள் கர்ப்பமாகிய நாள் முதல் தங்கள் பிரதேச மருத்துவ மாதுக்களின் கண்காணிப்பில் உள்ளதுடன், மாதாந்த கிளினிக்களிலும் தவறாது சமூகமளிக்க பணிக்கப்பட்டு அதிலும் தங்களையும், தன் குழந்தையின் நிலமையினையும் அறிகின்றபோது தென்படாத பல பிரச்சனைகள் ஏன் வைத்தியசாலையின் பிரசவ அறைக்கு சென்றவுடன் ஏற்படுகின்றது என்ற கேள்வியே தற்போது விஞ்சி நிற்கின்றதுடன் எங்கு தவறுகள் ஏற்படுகின்றது எனவும் அடையாளப்படுத்த முடியவில்லை.
இதனால் இனிவரும் காலங்களில் கர்ப்பிணிகளை யாழ் போதனாவைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே இது தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்றியல் பிரிவினர் மற்றும் நிர்வாகத்தினர் விரைந்து அக்கறை செலுத்தி மக்களின் அச்சத்தைபோக்கவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.