யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதைக் குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 19 மாணவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரை நீதிமன்றம் நீடித்து உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மாணவர்கள், கனிஷ்ட மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 19 சிரேஷ்ட மாணவர்களைக் கடந்த மாதம் நவம்பர் 29ஆம் திகதி கோப்பாய் காவல்துறையினர் கைது செய்தனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று (03/12) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள், மீண்டும் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது மாணவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரை நீடித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.