யாழ், மாவட்டத்தின் முதல்தர நகரங்களாக யாழ் நகரம் மற்றும் காங்கேசன்துறை ஆகியவற்றை மாற்றுவதற்கான திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த திட்டம் தொடர்பில் காட்சிப்படுத்ததுடன் விளக்கம் அளிக்கப்பட்டது.
காங்கேசன்துறையை மையமாகக் கொண்டு புகையிரத நிலையம்,விமான நிலையம், மற்றும் துறைமுகம் ஆகியவற்றை உள்ளடக்கிய முதலீட்டு ஊக்குவிப்பு வலையம் ஏற்படுத்தப்படவிருப்பதுடன் காங்கேசன்துறை புகையிரத நிலையம் நவீனமயப்படுத்தப்படவுள்ளது.
அதுமட்டுமல்லாது இரண்டாம் நிலை, மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும் மேற்படி கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதான்.செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில், மக்களுக்கு சாதகமான அபிவிருத்தித் திட்டங்களை நாம் வரவேற்போம்.
ஆனால் குறித்த பகுதிகளில் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் யார் முதலீட்டாளர்கள் எவ்வகையான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படப் போகின்றன போன்ற தகவல்களை வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் அறிக்கை விரைவில் வழங்கப்படுமெனத் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாணப் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.