குளிரூட்டப்பட்ட அதிவேக ரயில் சேவை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தொடர்ந்து செயல்படுத்தப்படவுள்ளது.
இதுவரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மட்டுமே இச்சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய பாடசாலை விடுமுறையும் சுற்றுலா பயணிகளின் அதிகரித்த தேவையையும் கருத்தில் கொண்டு, இந்த மாதம் 30 ஆம் திகதி வரை தினமும் சேவை நீடிக்கப்படவுள்ளது.
இரைவழி ரயில் சேவை குறித்து:
- காலை 5.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட ரயில், 11.15 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அடைகிறது.
- பின்னர், மதியம் 12.34 மணிக்கு காங்கேசன் துறை நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 7.20 மணிக்கு மீண்டும் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து பயணிக்கும் இந்த ரயில் தனது பயணத்தை கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் முடிக்கின்றது.
ஆனால், கல்கிசை வரை செல்லும் பயணிகள் புறக்கோட்டை நிலையத்திலிருந்து வேறு வாகனங்கள் மூலம் பயணத்தை தொடர வேண்டிய சூழல் நிலவுகிறது.
இது தொடர்பாக பயணிகள், கொழும்பின் புறநகர் பகுதிகளான வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி மற்றும் கல்கிசை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல ஏற்பாடுகளை செய்ய புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.