யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நிலவும் வைத்திய சேவை ஊழியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக சுகாதார அமைச்சு விரைவான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரச வைத்தியசாலைகளில் காணப்படும் மனிதவளக் குறைப்பாடுகளை சரி செய்து, அவற்றிற்கு தீர்வுகளை வழங்கும் நோக்குடன் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, ஊர்காவற்றுறை பொது மருத்துவமனை, வேலணை மாவட்ட மருத்துவமனை, வேலணை மற்றும் ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள், யாழ். போதனா வைத்தியசாலை, சாவகச்சேரி பொது வைத்தியசாலை, மாங்குளம் பொது வைத்தியசாலை ஆகியவற்றில் மனிதவளத்திலும் பௌதீக வளத்திலும் காணப்படும் குறைபாடுகள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது.
மேலும், தொற்று நோய்கள் கட்டுப்படுத்தல், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு வேலைத்திட்டங்கள் வழங்கல், மற்றும் மருத்துவமனைகளுக்கு மருந்துப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதன்போது, சுகாதார பணிப்பாளர், உடனடி தீர்வுகளை வழங்கக்கூடிய சிக்கல்களைச் சுட்டிக்காட்டி, அவை குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பணிப்புரை வழங்கியதோடு, ஏனைய பிரச்சினைகளுக்கு அமைச்சரின் கவனத்திலும் கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், அவரது கருத்தில், “யாழ். மாவட்டத்திற்குட்பட்ட அரச வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பயிற்சி மேற்கொண்டு வரும் மற்றும் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ள வைத்திய சேவை ஊழியர்களில் குறிப்பிடத்தக்க பகுதியினரை இந்த மருத்துவமனைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளோம்” என உறுதியளித்தார்.
இதேவேளை, புதிய அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்காக பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை சிறப்பாக பயன்படுத்தி மக்களுக்கு உயர்தரமான சுகாதார சேவையை வழங்குவது அமைச்சின் முக்கிய இலக்காகும் எனவும் அவர் கூறினார்.