மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று (டிசெ. 29) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 8 பேருக்கும் தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட 19ஆவது நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 118ஆக உயர்வடைந்துள்ளது.
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மருதனார் சந்தையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வியாபாரி நேரடித் தொடர்புடைய 6 பேருக்கு தொற்று உள்ளதாக கண்டறிப்பட்டுள்ளது. அவர்கள் 6 பேரும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த கீரிமலை, தெல்லிப்பழையைச் சேர்ந்த இருவருக்கும் இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் 8 பேரும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டவர்கள் என்றும் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 410 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.