மாவட்ட ஒருங்கிணைந்த இணைத் தலைவர்களின் வழிகாட்டலிலும் அரசாங்கத்தின் எண்ணக்கருவிற்கு அமைவாகவும் யாழ் மாவட்டத்தில் வீடுகள் இல்லாதவர்களுக்கு நிரந்தமான கல் வீடுகள் அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவற்றுக்காக இவ்வருடத்தில் கூடுதலான நிதி கிடைக்க பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
வீடு அற்றவர்களுக்கான நிரந்தமான வீட்டுத்திட்டத்தினை அமைக்கும் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்று (13) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் மாவட்ட அரசாங்க அதிபர் இதனை தெரிவித்தார்..
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
யாழ் மாவட்டத்தில் 21 ஆயிரம் பேர்களுக்கு இவ் வீட்டுத்திட்டம் அவசியம் தேவையாக இருந்த போதிலும் இவற்றில் 5,000 பேர்களுக்கான தேவைகள் மிக அவசியமாக காணப்பட்டுள்ளது.
அவற்றில் மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர்களில் முன்னுரிமை அடிப்படையில் 2,162 கல் வீடுகளாக அமைக்க நிதி கிடைக்கப் பெற்றுள்ளது.
இதில் 1,532 நபர்களுக்கு ஒரு மில்லியன் வீடுகள் என்னும் திட்டத்திலும், 630 நபர்களுக்கு ஆறு இலட்சம் வீடுகள் என்னும் திட்டத்திலும் இவ் வீட்டுத்திட்டங்கள் மாவட்டத்திற்கு கிடைக்க பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.