முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று (ஒக்ரோபர் 14) 9.00 மணிக்கு கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட விவசாய குழுக்கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
இக் கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட விவசாய பிரிவின் செயற்பாடுகள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் செயற்பாடுகள், மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகள், விவசாயம் காப்புறுதி சார் செயற்பாடுகள், மாகாண விவசாய திணைக்களத்தின் செயற்பாடுகள், கமநல அபிவிருத்தி திணைக்கள செயற்பாடுகள், விதை ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
மேலும், யானை முதலான வனவிலங்குகளினால் விவசாயிகள் எதிர்நோக்ககும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைத்தல்,பசளை மற்றும் கிருமிநாசினிகளின் தட்டுப்பாடு விலை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் கலந்துரையாடப்பட்டதுடன் ஏனைய பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
இந் நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் திரு சமன் பந்துளசேன, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) திரு.க.கனகேஸ்வரன் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.எஸ்.குணபாலன் வடமாகாண திணைக்களங்களின் செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள்,கமக்கார அமைப்பு பிரதிநிதிகள், நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.