முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட பிரதான பாதைகள் துண்டிப்பு – ஆளுநர் அறிக்கை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுடனான விசேட அவசரக் கலந்துரையாடல் ஒன்று இன்று (01/12 ) திங்கட்கிழமை காலை இணையவழியாக இடம்பெற்றது.

இதன்போது, இடருக்குப் பின்னரான காலப்பகுதியில் அந்தந்த மாகாணங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதியால் ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், மாகாணங்களின் தற்போதைய களநிலவரம் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார்.

வடக்கு மாகாணத்தின் நிலைவரம் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்த ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், பின்வரும் விடயங்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார்:

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான பிரதான போக்குவரத்துப் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளமை, பல்வேறு பகுதிகளில் தொலைத்தொடர்பு மற்றும் மின்சார விநியோக நடவடிக்கைகள் இன்னும் வழமைக்குத் திரும்பாதமை, பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவைகள்.

வடக்கு ஆளுநரின் கோரிக்கைகளைச் செவிமடுத்த ஜனாதிபதி, உடனடியாகச் சீர்செய்யப்பட வேண்டிய அவசர விடயங்களைப் பட்டியலிட்டு, ஒரு மணி நேரத்துக்குள் அனுப்பி வைக்குமாறு பணிப்புரை விடுத்தார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் உடனடியாகத் தொகுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுனர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்தின் ஐந்து அமைச்சுக்கள் மற்றும் அவற்றின் கீழுள்ள திணைக்களங்கள் ஊடாக, மாகாண ரீதியான முழுமையான பாதிப்பு விவரங்களைத் தொகுக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article