முல்லைத்தீவின் வீரப்பெண்மணி அரியாத்தையின் நினைவாக, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் ‘அரியாத்தை விருது’ வழங்கும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் கடந்த (19/05) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

.இந்நிகழ்வில், பெண்களின் தலைமைத்துவம், தொழில்முனைவு, சமூக சேவை, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் மற்றும் பல்வேறு சாதனைகளைக் கௌரவிக்கும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட ஆறு சிறந்த பெண்களுக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தால் ‘அரியாத்தை விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன், தொழில்முனைவில் வெற்றிகரமாக ஈடுபட்டுவரும் 16 பெண்களுக்கு ‘அரியாத்தை ஞாபகார்த்தப் பாராட்டுச் சான்றிதழ்கள்’ வழங்கப்பட்டன.
அண்மையில் வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுச் சாதனை படைத்த மாணவிகள் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டதுடன் அவர்களுக்குத் பணப்பரிசும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கௌரவ விருந்தினராக வாழ்நாள் சாதனையாளர் திருமதி எஸ்.அகிலத்திருநாயகி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அத்துடன், மாவட்டச் செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சாதனைப் பெண்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.