இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று (டிசம்பர் 02) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
முர்து பெர்னாண்டோ இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்ணாகவும், நாட்டின் 48ஆவது பிரதம நீதியரசராகவும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.
முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வுபெற்றதையடுத்து காலியாகியிருந்த இந்த பதவிக்கு, அரசியலமைப்பு சபையின் சமீபத்திய அங்கீகாரத்தின் பேரில் அவர் நியமிக்கப்பட்டார்.
1985ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் தனது பணியை தொடங்கிய முர்து பெர்னாண்டோ, 1997ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும், 2014ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்றார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரசதரப்பு சட்டத்தரணியாக 30 வருடங்களுக்கு மேல் சேவை செய்த அவருக்கு, 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உச்ச நீதிமன்ற நீதியரசர் பதவி வழங்கப்பட்டது. அவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாகவும் பணியாற்றியவர்.
முர்து பெர்னாண்டோ மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் பழைய மாணவியாவார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் சட்டத்துறை இளமானிப் பட்டம் பெற்றுள்ளார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.