அரசாங்கத்தின் நலன்புரி உதவித்திட்டப் பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து நாடெங்கிலும் நாளுக்குநாள் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன.
வவுனியாவில் பிரதான வீதிகளை முடக்கி மூன்று இடங்களில் நேற்றுமுன்தினம்(ஜூன் 26) நடத்தப்பட்ட போராட்டத்தால் பதற்றநிலை ஏற்பட்டது.
அரசாங்கத்தின் நலன்புரித் திட்டங்களுக்குத் தகுதிபெற்றவர்களுக்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்தது.
இதில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட தாம் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளோம் என்று தெரிவித்தே வவுனியாவில் நேற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
விதவைகள், முதியோர்கள், சிறப்புத் தேவையுடையவர்களைக்கூட இந்தத் திட்டத்தில் புறக்கணித்துவிட்டு, வெளிநாடுகளில் இருப்போரும் பணம் படைத்தோரும் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
வவுனியா பிரதேச செயலக வளாகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் முறைப்பாடுகளை, வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் நேரில்சென்று கேட்டறிந்ததுடன், அது தொடர்பில் தான் நீதியான விசாரணையொன்றை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.
எனினும், அவருடைய கருத்தில் திருப்தியில்லை என்று தெரிவித்த மக்கள் தொடர்ந்து வீதிமறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அத்துடன், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்துக்கு முன்பாகவும், வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவும் வேறு இரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று தரப்பினரும் ஏ9 வீதியில் பண்டாரவன்னியன் சதுக்கம் முன்பாக ஒன்று கூடி வவுனியா – மன்னார் பிரதான வீதி மற்றும் ஏ9 வீதி ஆகிய இரு பிரதான வீதிகளையும் மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டக்காரர்கள் வவுனியா மாவட்டச் செயலகத்துக்குள் நுழைந்ததையடுத்து வவுனியா மாவட்டச் செயலர் பீ.ஏ.சரத்சந்திர, அவர்களுடன் கலந்துரையாடி, வெளிவந்திருக்கும் பட்டியல் இறுதியானது அல்ல என்றும் முறைப்பாடுகளைப் பதிவுசெய்தால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி வழங்கினார்.
கிராம அலுவலர் பிரிவுகளுக்கு மாவட்டச் செயலக அதிகாரிகள் வரும்போது அவர்களிடம் முறைப்பாடுகளைப் பதிவுசெய்யுமாறும், மாவட்டச் செயலக அலுவலர்களின் விஜயம் தொடர்பான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாவட்டச் செயலரின் வாக்குறுதிகளை அடுத்து தற்காலிகமாகப் போராட்டம் கைவிடப்பட்டது. இதேவேளை, அடுத்தடுத்த நாள்களில் இந்தப் போராட்டங்கள் மேலும் தீவிரமாகலாம் என்று கருதப்படுகின்றது.