நெடுந்தாரகைப் படகின் நங்கூரம் கடந்த சீரற்ற காலநிலை காரணமாக காணாமல்போயுள்ள நிலையில், தற்காலிகமாக எழுதாரகைப் படகின் நங்கூரத்தை இதற்குப் பயன்படுத்துவதற்கு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கு ஆளுநர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் குறைகேள் சந்திப்பில் பங்குகொள்வதற்காக நெடுந்தீவுக்கான விஜயத்தை நேற்றையதினம் (மார்ச்05) வடமாகாண ஆளுநர் மேற்கொண்டிருந்த போதே பொதுமக்களால் இவ்விடயம் முன்னிலைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை இக் குறைகேள் சந்திப்பின்போது நெடுந்தீவு துறைமுகம், கடல்போக்குவரத்து, வீதிப்போக்குவரத்து என்பனவற்றில் எதிர்கொள்ளும்சிக்கல்கள் தொடர்பில் மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
வடதாரகை படகின் மின்விசிறிகள் இயங்காமையால் மிகவும் இன்னல் படுவதாக மக்கள் தெரிவித்த நிலையில் அதற்குப் பதிலளித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர், வடதாரகைப் படகின் மின்பிறப்பாக்கியில் திருத்தவேலை முன்னெடுக்க வேண்டியிருப்பதாகவும் அதற்கான உதிரிப்பாகங்களைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டார். இயன்றவரையில் விரைவாக சீர்செய்வதற்குநடவடிக்கை எடுப்பதாகப் பதிலளித்தார்.
நெடுந்தீவு துறைமுகத்தை புனரமைப்பதற்கான திட்டங்கள் கடற்படையினரிடம் இருப்பதாகவும் அது தொடர்பில் தன்னுடன் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஆளுநர், வெளிநாட்டு நிதி மூலங்களிலிருந்தே அதனை புனரமைப்புச் செய்யவாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார். அதற்கான முயற்சிகளையும் எடுத்துவருவதாகவும் தெரிவித்ததுடன் குறிகாட்டுவான் துறைமுகத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபைமுன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.