மிதமான அல்லது சற்று கனமான மழை நாளை காலை வரை தொடரும் – 29.11.2025 சனிக்கிழமை 3.30 PM- நாகமுத்து பிரதீபராஜா –
டிட்வா புயலின் மையத்தின் பின்பகுதி தற்போது நிலத்திலிருந்து கடலுக்குள் சென்றது. புயலின் மையம் எப்போதும் அமைதியானது. அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
டிட்வா புயலின் உள்வளையத்தின் பின்பகுதி கடலுக்கு செல்கின்றது. அதன் விளைவே தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் பெற்றுக்கொள்ளும் சற்று கனமான மழை.
இந்த மிதமான அல்லது சற்று கனமான மழை நாளை (30/11) காலை வரை தொடரும் வாய்ப்புள்ளது.
அத்தோடு வடக்கு மாகாணத்தில் இந்த புயல் முழுவதும் கடலைச் சென்றடையும் வரை காற்று சற்று வேகமாக வீசும் ( மணிக்கு 40-60 கி.மீ.) என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே காற்று வேகத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
ஒரு புயலின் மிக ஆபத்தான பகுதி உள்வளையமே. வலுவான காற்றையும், அடர்த்தியான ஈரப்பதன் மிக்க முகில்களையும் கொண்ட உள்வளையமே புயலின் மிக ஆபத்தான பகுதி. அது நீர்ப் பகுதியிலிருந்து நிலப்பகுதிக்குள் வரும்போதும், நிலப்பகுதியிலிருந்து நீர்ப் பகுதிக்கு செல்லும்போதும் அமைதியாக செல்லாது. இதுவே இலங்கை முழுவதும் இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
இன்று இரவு இதன் வெளிவளையமும் வெளியேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் மழை குறைந்தாலும் குளங்களுக்கான நீர்வரத்து அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
ஆகவே வடக்கு மாகாணத்தின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியம்.
இந்த புயல் இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் நிலவும் என்பதனால் வடக்கு, வட மேற்கு, கிழக்கு கடற்பகுதிகள் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்.