வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயலால் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காங்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரவு தீவிரம் பெற்ற புயல் மற்றும் கடும் மழையினால் அந்தப் பகுதிகளின் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.
வீதியோரங்களில் நின்றிருந்த பெருமரங்கள் பல பகுதிகளில் முறிந்து வீழ்ந்ததால் மின் விநியோக வடங்கள் சிதைவடைந்துள்ளன. இதனால் புயல், மழை வெள்ளத்துடன் மின்சாரம் இன்றி இரவிரவாக பல இலட்சம் மக்கள் பெரும் துயரைச் சந்தித்திருக்கின்றனர்.
இதனிடையே, தமிழ்நாடு அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.
சில தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் தொடருந்து நிலையங்களில் ஆயிக்கணக்கான மக்கள் தங்கியிருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தாழ்வான பகுதிகளில் வீடுகளில் வசிக்கும் வறுமைப்பட்ட மக்கள் அனைத்து வீட்டு உபகரணங்களையும் இழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வீடுகளிலிருந்து வெளியேறிய மக்கள் பொதுக்கட்டடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இருந்தபோதிலும் திடீர் நெருக்கடிகளை எதிர்கொள்வதில் அரச இயந்திரம் பலத்த சிக்கலை எதிர்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.