சைவ மக்களின் முக்கியமான விரதகாலமாகிய திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு, அகில இலங்கை சைவ மகாசபையின் வருடாந்த ஆன்மீகப் பாதயாத்திரை, காரைநகர் ஈழச் சிதம்பரத்தை நோக்கி, வரலாற்றுப் புகழ்பெற்ற மாதகல் சம்புநாத ஈச்சரர் முன்றலில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 05) காலை 7 மணிக்கு தொடங்கும்.
சம்பில்துறை சம்புநாத ஈச்சரர் ஆலயத்தில் ஆரம்பமாகும் இப்பாதயாத்திரை, சுழிபுரம், மூளாய், மற்றும் பொன்னாலை வழியாக செல்லும் வழியில் பல இந்து ஆலயங்களை தரிசித்து, அதே நாளின் மாலை காரைநகர் ஈழச் சிதம்பரத்தை அடையும்.
பாதயாத்திரையில் பங்கேற்கும் அடியவர்களுக்காக, பொன்னாலைச்சந்தியில் உள்ள நாராயணள் தாகசாந்தி நிலையத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்படும்.
இந்த ஆன்மீகப் பாதயாத்திரை செல்லும் வழிகளை சுத்தமாக வைத்திருக்கவும், மாவிலை தோரணங்கள் கட்டி அழகுபடுத்தவும் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், அனைத்து சைவ மக்களும் இந்தப் பாதயாத்திரையில் பங்கேற்கத் தவறாமல் அழைக்கப்படுகிறார்கள் என அகில இலங்கை சைவ மகாசபை அறிவித்துள்ளது.