மாவை சேனாதிராஜாவின் வாழ்க்கை ஓர் தொகுப்பு
மாவை சேனாதிராஜா 1942 அக்டோபர் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் பிறந்தார். 1961ஆம் ஆண்டு, தனது 19வது வயதில், தந்தை செல்வா அவர்களுடன் சேர்ந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர், 1962ஆம் ஆண்டு, தனது 20வது வயதில், இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்தார். அரசியல் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்ட அவர், 1969 முதல் 1983 வரையிலான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை மற்றும் மெகசீன் சிறைச்சாலைகளில் சேர்த்து, மொத்தம் 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்தார்.
1977ஆம் ஆண்டு, ‘பவானி’ என்பவரை மணந்தார். பின்னர், 2014 முதல் தனது இறப்பு வரை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்தார். 1962 முதல் 2024 வரை, சுமார் 63 ஆண்டுகளாக கட்சி பணியில் ஈடுபட்டிருந்தார்.
மறைவு
மாவை சேனாதிராஜா, அண்மையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 29ஆம் திகதி உயிரிழந்தார். குளியலறையில் தவறி விழுந்ததில் ஏற்பட்ட தலையின் நரம்பு சேதம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறுதிக்கிரியைகள் 02.02.2025 ஞாயிறு பிற்பகல் 3 மணிக்கு மாவிட்டபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றப் பிரவேசம்
1989ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியுற்றார். அதன் பின்னர், அ. அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.
1999ஆம் ஆண்டு நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார்.
2000ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) சார்பாக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001ஆம் ஆண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் (ததேகூ) இணைந்து, தொடர்ச்சியாக 2004, 2010, 2015 தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவுகள்
- 1989 – 2,820 வாக்குகள் (தேர்வு செய்யப்படவில்லை)
- 2000 – 10,965 வாக்குகள் (தேர்வு செய்யப்பட்டார்)
- 2001 – 33,831 வாக்குகள் (தேர்வு செய்யப்பட்டார்)
- 2004 – 38,783 வாக்குகள் (தேர்வு செய்யப்பட்டார்)
- 2010 – 20,501 வாக்குகள் (தேர்வு செய்யப்பட்டார்)
- 2015 – 58,782 வாக்குகள் (தேர்வு செய்யப்பட்டார்)
- 2020 – 20,358 வாக்குகள் (தேர்வு செய்யப்படவில்லை)
மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான இழப்பாகவே பார்க்கப்படுகிறது.