தீவக மக்களின் நலனில் முக்கிய பங்கு வகித்த மறைந்த அமரர் ஜே.எக்ஸ். செல்வநாயகம் அவர்களின் இறுதி அஞ்சலியின் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு, மலர்மாலை அணிவித்து தனது இறுதி அஞ்சலியையும் மரியாதையையும் செலுத்தினார்.
வட மாகாண ஆளுநரின் முன்னாள் உதவி செயலாளராகவும், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகங்களில் முன்னாள் செயலக அதிகாரியாகவும் பணியாற்றிய ஜே.எக்ஸ். செல்வநாயகம் அவர்கள், உடல்நலக்குறைவால் நேற்று (ஒகஸ்ட் 02) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலமானார்.
நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட அவருடைய பூதவுடல், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த டக்ளஸ் தேவானந்தா, அவரது குடும்பத்தினரிடம் ஆறுதலும் அனுதாபமும் தெரிவித்தார்.
அமரரின் இறுதி அஞ்சலியின் போது கட்சியின் மூத்த உறுப்பினரும், வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
1990களில் தீவக மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்பட்ட பணிகளில், அவர் அரச உயர் அதிகாரியாக இருந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கியவர் என்பதை நினைவுபடுத்திய டக்ளஸ் தேவானந்தா, சமூக நலனுக்காக உறுதியாக செயல்பட்ட மனிதாபிமானம் நிறைந்த அந்த ஆளுமையை இழந்தது தீவக மக்களுக்கு பாரிய இழப்பாகும் என்றும், அவரது சேவையில் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்ப முடியாததாகும் என்றும் குறிப்பிட்டார்.