தமிழறிஞர், ஆராய்ச்சியாளர், விஞ்ஞானி, எழுத்தாளர், ‘தமிழர் வரலாற்றைக் கரைத்துக் குடித்தவர்’ என்று புகழப் பட்டவர், இவ்வளவு பன்முகத் திறமை கொண்ட 61 வயதைக் கூட எட்டாத திரு. ‘ஒரிசா பாலு’ என்று அழைக்கப்பட்ட திரு. எஸ்.பாலசுப்பிரமணி அவர்கள் நேற்று (ஒக்ரோபர் 6) கேரளாவின் தலைநகரமாகிய திருவனந்தபுரத்தில் காலமானார்.
தமிழ்ப் பேரரசுகளின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி ஆகியவற்றை ஆராய்ச்சி செய்து அது சம்பந்தமாக நூல்களையும், ‘கீழடி’ பற்றி ஒரு நூலையும்(“யாரும் அறியாத கீழடி மர்மங்கள்”) ‘கலிங்கப் பேரரசு'(தற்போதைய ஒடிசா) க்கும் சோழப் பேரரசுக்கும் இருந்த தொடர்புகள் பற்றியும் ஆராய்ச்சி செய்து நூல்கள் எழுதியதோடு கடந்த 34 ஆண்டுகளாக அங்கேயே(ஒடிசாவில்) வசித்தும் வருவதால் இவருக்கு ‘ஒரிசா பாலு’ என்ற பெயர் ஏற்பட்டது.
“சோழப் பேரரசு பர்மா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், கொரியா வரை நீண்டிருந்தது” என்று செவி வழியாக நாம் அறிந்தவற்றை ஆராய்ச்சிகள் ஊடாக உறுதிப் படுத்தியவர்.
“ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பர்மா(மியான்மர்) தாய்லாந்தில் இருந்து கடலாமைகள் தமிழகத்திற்கு(தஞ்சை, நாகை, புதுக்கோட்டை) முட்டையிடுவதற்காக வருகின்றன. ஆகவே அவற்றிற்குத் ‘தாய் வீடு’ தமிழகமே! என்ற தகவலையும், அந்த நீரோட்டத்தைக் கண்டு பிடித்த தமிழர்கள்(சோழர்கள்) பர்மாவில் வெட்டப் பட்ட ‘தேக்கு மரங்களை’ அந்த நீரோட்டத்தைப் பயன்படுத்தி கடல் நீரில் மிதக்க விட்டு சோழ நாட்டிற்கு(தஞ்சாவூர்) கொண்டு வந்து சேர்த்தார்கள்” என்ற தகவலையும் முதன் முதலாக தமிழ் கூறு நல் உலகிற்கு அறிவித்தவர் அவரே!
அது மட்டுமல்ல “உலகில் கடவுச் சீட்டு(Passport) பாவனையில் உள்ள 220 நாடுகளில் 106 நாடுகளின் கடவுச் சீட்டோடு அந்தந்த நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்” என்று உலகிற்கு முதன் முதலில் எடுத்துச் சொன்னவரும் இவரே. அவர் நூறாண்டுகள் வாழ்ந்திருந்தால் தமிழருக்கு பல அரிய வரலாற்றுப் பொக்கிஷங்கள் கிடைத்திருக்கும்.
தமிழன் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். 60 வயது மட்டுமே நிரம்பிய தமிழ் ஆராய்ச்சியாளர் , அறிஞரின் இழப்பு பேரிழப்பு! அன்னாரின் இழப்பு தமிழ் கூறு நல்லுலகிற்குப் பேரிழப்பு ஆகும்.