இலங்கையில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அங்கு மீட்கப்படும் உடல்கள் யாருடையவை? அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பொறிமுறைகளில் எமக்கு நம்பிக்கையில்லை. சர்வதேச பொறிமுறையும், சர்வதேச நிபுணர்களும் இதில் தலையிட வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று(ஜூலை 12) முல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தொடர் சுழற்சிமுறைப் போராட்டம் 3 ஆயிரம் நாள்களைக் கடந்துள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போரில் மக்களைக் கொல்லவில்லை, இனப் படுகொலை நடக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிக் கொண்டிருக்கின்றது.
அவ்வாறிருக்கையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மனிதப் புதைகுழி எவ்வாறு வந்தது? கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி முற்றுமுழுதாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் யாருடையவை? இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் நீதியாகச் செயற்படும் என்று எம்மால் நம்பிக்கை கொள்ள முடியாது. இலங்கையின் பொறிமுறை மீது எமக்கு நம்பிக்கை துளியும் இல்லை.
இந்த விடயத்தில் சர்வதேச பொறிமுறை ஒன்று கொண்டுவரப்பட்டு, சர்வதேச நிபுணர்கள் இதில் தலையிட வேண்டும். கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் யாருடையவை என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினர் விசாரணை எனும் பெயரில் எம்மை மிரட்டுகின்றனர். சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக கண்துடைப்பு விசாரணையை முன்னெடுக்கின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச விசாரணை ஒன்றே வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரனும் பங்குபற்றினார்.