இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட 2000 ரூபாய் மதிப்புடைய புதிய நினைவு நாணயத் தாள், இன்று (ஒகஸ்ட் 29) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
புழக்கத்தில் பயன்படக்கூடிய வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்நாணயத் தாள், மத்திய வங்கியால் வெளியிடப்படும் 5ஆவது நினைவு நாணயத் தாளாகும்.

“சுபீட்சத்திற்கான ஸ்திரத்தன்மை” என்ற ஆண்டு நிறைவு தொனிக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நாணயத் தாள், தேசிய அபிவிருத்திக்கான அடித்தளமாக பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் மத்திய வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கே.எம்.ஏ.என். தௌலகல, உதவி ஆளுநர் கே.ஜி.பி. சிறிகுமார மற்றும் நாணயத் திணைக்கள ஆளுநர் பீ.டீ.ஆர். தயானந்த ஆகியோரும் பங்கேற்றனர்.