“மாமனிதர் என்ற புகழுக்கு தகுந்தவராகவே அமரர் ஜோசேப்பு சேவியர் செல்வநாயகம் வாழ்ந்தும் மறைந்தும் விட்டதாக” செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அன்னாரின் மக்கள் நலனுக்கான சிந்தனைகளும், சமூகத்துக்காக மேற்கொண்ட சேவைகளும் அவரை மக்களிடம் மரியாதைக்குரிய இடத்திற்கு உயர்த்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னாள் அரச அதிகாரியான செல்வநாயகம் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் நடைபெற்ற இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி உரையாற்றிய அவர், 1990களின் தொடக்கத்தில் தீவகத்தில் நிர்வாகத்தினை மீண்டும் செயல்படுத்தும் முயற்சியில் ஏற்பட்ட சவால்கள் குறித்து நினைவுகூரினார்.
அந்த காலப்பொழுதில், அன்றைய அரசியல் சூழ்நிலையால் பல அரச அதிகாரிகள் தயக்கம் காட்டிய போதும், செல்வநாயகம் அவர்கள், அரசு திட்டமிடல் சேவையில் இருந்தபோதிலும் தன்னுடைய கடமையை உணர்ந்து, நேர்மையாக முன்வந்து நிர்வாக சேவையில் இணைந்தார்.
இதன் அடிப்படையில் விசேட அமைச்சரவை முடிவின் மூலம், அவர் ஊர்காவற்றுறை பிரதேச உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார்.
அந்த காலகட்டத்தில், தன்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, மக்கள் நலத்திற்கான திட்டங்களை பரிந்துரைத்து பல முனைப்புகளை முன்னெடுத்ததாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அதனிடையே, செல்வநாயகம் மேற்கொண்ட செயற்பாடுகள் வடக்கு கிழக்கு மாகாண சபை வழியாகவும், பின்னர் வட மாகாண ஆளுநரின் செயலாளராகவும் தொடர்ந்ததாகவும், அவருடைய பணியாற்றும் விருப்பம் மற்றும் மக்கள் நலன் குறித்த தன்னிச்சையான ஈடுபாடே இதற்கான அடித்தளமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இவ்வாறான ஒருவர், மாமனிதராக ஏற்கப்பட வேண்டியவர் என ஆசிரியர் செல்வா இங்கு உரையாற்றினார். உண்மையில், தனது வாழ்க்கை முழுவதும் மக்கள் சேவையால் மாமனிதனாக தன்னை நிலைநிறுத்திய அமரர் செல்வநாயகத்திற்கு எமது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்”