மக்களையும் தேசத்தையும் காக்க வேண்டும் – அருட்தந்தை மா.சத்திவேல் !!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

மக்களையும் தேசத்தையும் தேசியத்தையும் காக்கவும் எதிர்கால பேரவலத்திலிருந்து மீட்கவும் அவசர செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் நேற்று (14/02) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதியாக வடக்கிற்கு சென்றபோது உடற்பயிற்சியென வீதியில் நடந்து சென்றதும், கடந்த 11ஆம் திகதி அவர் மலையகம் சென்றபோது மலையக தொழிலாளர்களை தேடி சென்று சந்தித்ததும் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

இவை இரண்டுமே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகங்கள் எனலாம். இது கவர்ச்சி அரசியலில் மக்களை ஆக்கிரமிக்கும் அரசியல் எனவும் கூறலாம். இரண்டு சம்பவங்களிலும் நான் சாதாரணமானவன், எளிமையானவன், இனிமையானவன், மக்களுக்கு நெருக்கமானவன் எனும் தோற்றப்பாட்டை மக்களுக்குள் புகுத்தும் அரசியலில் ஜனாதிபதி வெற்றி பெற்றுள்ளார் என்றும் கூறலாம்.

இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் திட்டமிட்ட ஆயத்த நடவடிக்கைகளும் நிறைவேறி உள்ளன. மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ரூபா 400 சம்பள அதிகரிப்போடு மலையக மக்களை மலையேறி சந்தித்த வேளையில் பலர் செல்பி எடுத்துக் கொள்ள பெரும் ஆர்வம் காட்டி எடுத்து மகிழ்ந்தனர்.

ஒரு பெண் தொழிலாளி “நீங்கள் 200 வருடம் வாழ வேண்டும்” என வாழ்த்தியதும், இன்னும் ஒரு தாய் “நீங்கள் எங்கள் கடவுள்”என்றதோடு, சாமி மலை தோட்டத்தில் தொழிலாளர்கள் ஜனாதிபதியின் உருவப்பட பதாகைக்கு பாலாபிஷேகம் செய்ததையும் சமூக ஊடகங்களில் காணலாம்.

ஜனாதிபதி கடந்த மாதம் பொங்கலுக்கு யாழ்.வந்த போது தமிழ் கலாச்சாரத்துடன் வரவேற்கப்பட்டதோடு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததையும் செல்பி எடுப்பதில் இளம் வாலிபர்கள் போட்டியிட்டததையும், அருகில் இருப்பது பெரும் பாக்கியமாக கருதியதையும் காணக் கூடியதாக இருந்தது.

தமிழர் தாயகமான வடக்கிலும் கிழக்கிலும், மலையகத் தமிழர் தேசத்திலும் ஜனாதிபதியினதும், தேசிய மக்கள் சக்தியினதும் அரசியல் கொடிகள் மட்டுமே பறக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்படுவதையும் எம்மால் உணர முடியும். இதுவே கட்சி அரசியல்.ஆனால் அதுவே தனிநபர் வழிபாடாகவும் தடம் பிறழ்ந்து செல்வதையும் நாம் அவதானிக்கின்றோம்.

 வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் தமிழ் தலைமைகளும், மலையக அரசியல் தலைமைத்துவங்களும் தம் தனித்துவ தேசிய அரசியல் நிலைப்பாட்டினின்று விலகாது தமிழர்களின் தேசிய அரசியலுக்காக சார்பு நிலை எடுத்து நாடாளுமன்றிலும் அதற்கு வெளியிலும் பொது மேடையில் ஒன்று பட வேண்டுமெனவும் கேட்கின்றோம்.

ஏனெனில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி முன்னைய ஆட்சியாளர்களை விட சிங்கள பௌத்த கருத்தியலுக்குள் பலமாக நின்று தமிழர்களின் அரசியலையும் தேசியத்தையும் தேசிய அடையாளங்களையும் அழிக்கவும் எம் மக்களை மயக்க அரசியலுக்குள் தள்ளி தம் அரசியலை முன்னெடுக்கவும் வேகம் காட்டும் காலகட்டம் இது.

எமது மக்களையும், தேசத்தையும், தேசியத்தையும் காக்கவும் எதிர்கால பேரவலத்திலிருந்து மீட்கவும் அவசர செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை கொடுக்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Article