போதைப்பொருள் மத்திய நிலையமாக பல்கலைக்கழக பீடம் – புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக பிரதமர்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

போதைப்பொருட்களை விற்பனை செய்யும் மத்திய நிலையமாக பல்கலைக்கழக பீடமொன்று காணப்படுகின்றமை தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறான செயற்பாடுகளும், பகிடிவதை என்ற பெயரில் இடம்பெறும் துன்புறுத்தல்களும் தடுக்கப்படாவிட்டால் பல்கலைக்கழக கட்டமைப்பை பாதுகாக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2025ஆம் ஆண்டிலும் பகிடிவதை குறித்து பேசிக் கொண்டிருப்பது உண்மையில் கவலைக்குரிய விடயமாகும். பல்கலைக்கழக கலாசாரமொன்றை பேணிச் செல்வதற்கு பகிடிவதை தேவை என்று எண்ணினால், அது பாரதூரமான பிரச்சினையாகும். உப வேந்தர் முதல் அலுவலக உத்தியோகத்தர்கள் வரை யாரைக் கேட்டாலும் தமது பல்கலைக்கழகத்தில் பகிடிவதை இல்லை என்கின்றனர்.

ஆனால் மாணவர்கள் உயிரிழக்கின்றனர். பல்கலைக்கழகத்தை விட்டு இடை விலகுகின்றனர். இவை யாருக்கும் தெரியவில்லையா? தற்போது பதிவாகும் சம்பவங்களை தொடர்ந்தும் பகிடிவதை என்று கூட விளிக்க முடியாது. அவை பகிடிவதைகளுக்கு அப்பாற்பட்ட கொடூரமான வன்முறைகளும், துன்புறுத்தல்களுமாகும். சமூகத்தில் மிகவும் கீழ் மட்டத்திலிருந்து பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் இங்கு வரும் மாணவர்களே அதிகளவில் இந்த துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.

அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே இந்த விடயத்தில் எமது தலையீடு அத்தியாவசியமானதாகும். போதைப்பொருட்களை விற்பனை செய்யும் மத்திய நிலையமாக பல்கலைக்கழக பீடமொன்று காணப்படுகின்றமை தொடர்பில் எமக்கு புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன.

பெயர் உள்ளிட்டவற்றுடன் இந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், எம்மால் இந்த பல்கலைக்கழக கட்டமைப்பை பாதுகாக்க முடியாது.

பகிடிவதை என்ற பெயரில் அரங்கேறும் துன்புறுத்தல்களை இல்லாதொழிக்கவும், போதைப்பொருள் பாவனையை முற்றாக அழிக்கவும் அனைவரும் இணைந்து செயற்படுவோம் என அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.

Share this Article