பொலிஸாரால் தாக்கப்பட்ட மலையக தமிழ் இளைஞன் பொலிஸாரால் கைது.
மஹரகம பகுதியில் பொலிஸ் உத்தியோஸ்தரொருவர் இளைஞரொருவரை தாக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
தாக்கப்பட்ட இளைஞர் அப்புத்தளையை சேர்ந்த 24 வயதான க.பிரவின் எனும் மலையக தமிழர் என தெரியவருகிறது.
இவர் பண்டாரவளையில் இருந்து மரக்கறி வகைகளை லொறியில் ஏற்றி கொண்டு நேற்று (29) கொழும்பு சென்றுள்ளார்.
மஹரகம நகர் வரும் போது இவரது கண் அசதியாக ஒரு கணம் மூடப்பட்டுள்ளது. பின்னர் அவரது லொறி நிலை தடுமாறி பாதையை விட்டு விலகிய போது அங்கே வீதி போக்குவரத்து கடமையில் இருந்த பொவிஸ் உத்தியோகஸ்தர் மீது லொறி கண்ணாடி உரசி இருக்கிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சாரதியை வாகனத்தில் இருந்து இழுத்து இறக்கி இருக்கிறார். அந்நேரம் அங்கு நின்ற ஆட்டோ சாரதி உடனடியான லொறி சாரதியை தாக்க பின்னர் பொலிஸ் உத்தியோஸ்தர் தாக்கி இருக்கிறார்.
தற்போது தாக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டுள்ளார்.
ஆனால் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் தற்போது மஹரகம பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு தலை மற்றும் வயிறு வலிப்பதாக இவரை பார்க்க சென்ற அவரது நிறுவன பணிப்பாளரிடம் கூறியுள்ளார்.
ஆயினும் அவருக்கு இதுவரை மருத்துவ சிகிச்சை எதுவும் வழங்கப்படவில்லை என அவர் தொழில் புரியும் அப்பே ஹார்த்திகேய நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிறுவனம் யூனி பிரதர்ஸ் நிறுவனத்தின் சகோதர நிறுவனமாகும். இளைஞரின் நிலைமை குறித்து தாங்கள் கவலைப்படுவதாக தெரிவித்த அவர்கள் இது தொடர்பாக மனித உரிமை ஆனைக்குழுவில் முறைப்பாடொன்றை செய்ய இருப்பதாக சொன்னார்கள்.
தாக்கிய குறித்த அதிகாரி பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.