பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட நெடுஞ்சாலை கட்டமைப்பை அரசாங்கம் அங்கீகரிக்கிறது – ஜனாதிபதி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதில் பயிற்சி பெற்ற மனித வளங்களின் முக்கியத்துவத்தை அரசாங்கம் அங்கீகரிக்கிறது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(நவம்பர்26) பிற்பகல் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளில்  வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியதால், அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் அரசாங்கம் பல சிக்கல்களை எதிர்கொண்டதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் தொடர்ச்சியான பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை  பொறியியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக,  சட்டங்களில் உள்ள சிக்கல்கள் காரணமாக பல ஆண்டுகளாக தாமதமாகியுள்ள பொறியியல் துறை மற்றும்   வீதி அபிவிருத்தி அதிகாரசபை  பொறியியலாளர்களுக்கும் இடையிலான சம்பள முரண்பாடுகள், பதவி உயர்வுகள் குறித்து இதன் போது  கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி, இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாக சாதகமான தீர்வுகளை வழங்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி நிதியமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில சி.கே. பெரேரா, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் ,  வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் டி. பாஸ்கரன், பணிப்பாளர் நாயகம் கே.டபிள்யூ. கண்டம்பி மற்றும்  வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியாளர்கள் குழு ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Share this Article
Leave a comment