நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை யாழ். மாவட்டத்தில் உள்ள தீவகப்பகுதியையும் மிக மோசமாக பாதித்திருக்கின்றது.
தொழில் வாய்ப்பின்மை, நிரந்தர வருமானமின்மை போன்ற காரணங்களாலும் உதவிகள், நிவாரணங்கள் இல்லாமலும் அந்தப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கூடுதலாக மீனவர்களையும் விவசாயிகளையும் கொண்ட இந்தத் தீவகப் பகுதியில் தற்போது கடுமையான வறுமை நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு புறம் குடிதண்ணீர்ப் பிரச்னையும் இந்தப் பகுதி மக்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள் இங்கே…!
தொழில்களின்றி அவதி
சு.லியோன் (புளியங்கூடல், சின்னமடு)
எமது கிராமம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாத நிலையில் காணப்படுகின்றது. பாரிய கஷ்டநிலை காணப்படுகின்றது. தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. போசனங்கள் உணவருந்துவதற்குக்கூட எங்கள் மக்களுக்கு இடர் நிலை காணப்படுகிறது. ஒரு நேரம் மாத்திரமே உணவருந்தக்கூடிய நிலை காணப்படுகின்றது. இரண்டு நேரம் உணவருந்தாது ஒரு நேரம் உணவருந்துகின்ற நிலை காணப்படுகின்றது. சிறு குழந்தைகளுக்குக்கூட போசாக்கான உணவை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது. குறிப்பாக சிறுவர்கள் பெரும் இடர்களை எதிர்நோக்குகின்றார்கள். 100 ரூபாய் உழைத்தால் ஒரு பொழுதிற்கே அந்த 100 ரூபாய் காணாத நிலை காணப்படுகின்றது. அத்தோடு சம்பள வாய்ப்புகள் தீவகத்தில் குறைவாக காணப்படுகின்றன.
குடும்பச் செலவுகளை கொண்டு நடத்துவதற்கு முடியாத நிலை காணப்படுகின்றது.
சொந்த தொழில் இல்லாத காரணத்தினால் இங்கே தொழில்துறைகூட சரியான முறையில் இல்லை. குறிப்பாக ஒரு கிராமத்தில் 50 பேர் இருக்கின்றார்கள் என்றால் ஐந்து பேருக்கு சொந்தப் படகுகள் காணப்படுகின்றன. ஏனையோர் அந்த படகுகளில் கூலிக்கு தான் தொழிலுக்குச் செல்வார்கள். எனவே இங்கே தொழில்துறை என்பது நிரந்தரமற்ற தொழில் துறையாகவே காணப்படுகின்றது.
அத்தோடு சிலர் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள். இந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக பலர் நஷ்டத்தை எதிர்நோக்குகின்றார்கள். குறிப்பாக சிறு பிள்ளைகளுக்கு உணவை வழங்குவதில் பெரும் இடர்பாட்டு நிலை காணப்படுகின்றது. எனவே அரசாங்கம் தீவக மக்களுக்கு விடுதலையை பெற்றுகொடுக்கவேண்டும். அத்தோடு இந்த விடயம் தொடர்பில் வெளி உலகுக்கு தெரியப்படுத்தவேண்டும். தீவகத்தில் வாழுகின்ற மக்கள் அனைவரும் பாரிய கஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.
இந்த கஷ்டம் நீங்கவேண்டுமாக இருந்தால் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டால் மாத்திரமே நமக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
வறுமையில் வாடுகின்றோம்
போல்ராஜ் (வேலணை)
தீபகபகுதி மக்கள் மிகவும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்கள். தீவகம் என்பது தனித்துவமாக இருந்தாலும் எங்கள் தொழில்வாய்ப்புகள், பொருட்கள் விலைவாசி அதிகரித்ததன் காரணமாக மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள் துன்பப்படுகின்றார்கள். பல தொழில்துறை சார்ந்த மக்கள் இங்கே இருக்கின்றார்கள். விவசாயிகள், கடற்தொழில், சீவல்தொழில் மற்றும் ஏனைய தொழில்களைச் செய்கின்ற மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
இன்றைய சூழல் உண்மையாகவே ஒரு இக்கட்டான நிலையில் காணப்படுகின்றது. கொரோனாவும் எங்களை மிகவும் பாதித்துவிட்டது. மீண்டும் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதன் காரணமாக வறுமை தீவக மக்களை மிகவும் வாட்டி வதைக்கின்றது.
தற்பொழுது ஓரளவு சாதகமான நிலை காணப்படுகின்றது. ஆனால் தற்போதைய ஜனாதிபதியின் முயற்சியினால் சில பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஆனால் முழுமையாக குறைக்கப்படவில்லை. அவ்வாறு குறைக்கப்பட்டால் ஏதாவது மாற்றங்கள் இடம் பெறலாம்.
தீவகப் பகுதி மக்கள் மிகவும் குறைந்த வருமானத்தை பெறுபவர்களாக காணப்படுகின்றனர். குறிப்பாக விவசாயிகள், மீனவர்களுக்கு எரிபொருள் பிரச்சனை என்பது ஒரு பெரிய பிரச்னையாக காணப்படுகின்றது. மண்ணெண்ணெய் விலையை 50 ரூபாய் குறைத்தமையினால் ஓரளவு மக்களுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது.
எனினும் அரசு இந்த விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும். ஜனாதிபதி வெறும் கையோடு நாட்டை பொறுப்பெடுத்து தற்போது சில பொருட்களின் விலையை குறைத்துள்ளார்.
அதேபோல எதிர்வரும் காலங்களிலும் தீவக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தீவக மக்களும் மனிதராக வாழ்வதற்கு தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூன்றுவேளை சாப்பிடவே மிகவும் கஸ்டப்படுகிறோம்
ராமன் விநாயகன் (சரவணை இரண்டாம் வட்டாரம்)
தீவக மக்களின் நிரந்தர வாழ்க்கை பற்றி உலக மக்கள் அறிய வேண்டும்.
எமது நாடு வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட நாடு. பள்ளத்தில் விழுந்து
வெள்ளத்தில் மிதந்து எந்த உதவியும் இல்லாமல் தற்போது நாடு சற்று நிமிர்ந்து கொண்டிருக்கின்றது.
அதேபோலத்தான் தீவகப்பகுதியும் ஒரு வறுமைக் கோட்டுக்குட்பட்ட பகுதி. அன்றாடம் உழைத்து உண்பவர்கள். ஒரு நாளைக்கு ஒரு வீட்டில் தொழிலுக்கு செல்லாவிட்டால் அந்த வீட்டு அடுப்படியில் பூனை படுக்கும் என முன்னோர்கள் சொன்ன கதை தற்பொழுது சாத்தியமாகின்றது.
விலைவாசி அதிகரிப்பு, கொரோனா மற்றும் நாட்டில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக தற்போது பொருளாதார நிலை கீழ் நோக்கிச் சென்றுவிட்டது.
தற்போதுள்ள சூழ்நிலையில் மக்களை எவ்வாறு வழிநடத்துவது என தெரியாத நிலையில் அரசாங்கம் காணப்படுகின்றது.
அரசியல் நிலைக்கு அப்பால் பொதுமக்கள் மூன்று நேர உணவை உண்பதற்குக்கூட தத்தளிக்கின்ற நிலை காணப்படுகின்றது.
அதிலும் தீவக பகுதி ஏற்கனவே ஒரு வறுமைக் கோட்டுக்குட்பட்ட மக்களைக் கொண்ட பகுதி. முன்னர் ஐம்பது ரூபாய் விற்ற பாணை இன்று 200 ரூபாய்க்கு வேண்டிய நிலை காணப்படுகின்றது. குறிப்பாக ஒரு நாள் கூலி தொழிலுக்குச் செல்பவர் ஆயிரம் ரூபாய் சம்பளத்தைத்தான் பெற்றுக்கொள்ள முடியும்.
அவ்வாறு பெறுபவர் எவ்வாறு அரிசியை வாங்குவது? எவ்வாறு தேங்காய் வாங்கி வீட்டில் சமைத்து உண்பது? என்ற நிலை காணப்படுகின்றது.
அவ்வாறான ஒரு வறுமை நிலைக்கு தீவக மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். குறிப்பாக தீவகப் பகுதியை சுற்றியுள்ள மக்கள் ஏழு தீவுகளை உள்ளடக்கிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள்.
அன்றாடம் தொழிலுக்குச் சென்றுதான் தீவக மக்கள் தாமது வாழ்வாதாரத்தை மேற்கொள்கிறார்கள். தீவக மக்களை நிலைப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குறிப்பாக அமைச்சர்கள் ஒரு நாளாவது தீவுப் பகுதிக்கு வருகை தந்து மக்களின் அவலநிலையை நேரில் பார்க்க வேண்டும்.
வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்கள் படும் அவலங்களை நேரில் வந்து பாருங்கள்.
ஆனால் அமைச்சர்கள் யாரும் இங்கு வருவதில்லை. ஏதாவது மகஜர்களை கொண்டு போய்க் கொடுத்தால் அதனை பார்க்கின்றோம் எனக் கூறுவார்களே தவிர இங்கே வருகை தந்து எந்தச் செயற்பாடுகளையும் மேற்கொண்டதாக நாங்கள் அறியவில்லை.
குறிப்பாக கல்வித்துறையை எடுத்துக்கொண்டால் தீவக பகுதியில் கடந்த வருடம்கூட ஐந்து பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் தமது கல்வியை தொடர்வதற்கு விரும்பாத நிலையில் உள்ளார்கள். ஏனென்றால் பொருளாதார நிலை என்பது அவ்வாறு நிலையில் காணப்படுகின்றது.
எனவே இந்த அரசாங்கமானது தீவகப் பகுதியை உலகத்திற்கு தெரியப்படுத்தவேண்டும். குறிப்பாக அரசில் உள்ளவர்கள் கண் திறந்து பார்த்து இந்த நிலையை வெளியுலகத்துக்கு தெரியப்படுத்தவேண்டும்-என்றார்.
பொருளாதார நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்
வேலும் மயிலும் (சரவணை)
சப்த தீவுகளில் ஒன்றாகிய சரவணைப் பகுதியில் வசித்து வருகின்றோம். தீவகம் ஒருசிறப்பான இடம். எங்கள் மக்கள் தொடர்பில் அரசு அலுவலர்கள், தொழிற்சங்கங்கள்,அரச நிறுவனங்களுக்கு பகிரவேண்டும் என எதிர் பார்க்கின்றோம். எமது மக்கள் மிகவும் கஷ்டப்படு கின்றார்கள்.
இங்கே குடிதண்ணீர்ப்பிரச்னை என்பது பெரிய பிரச்னையாக உள்ளது. பிரதான தொழிலாக விவசாயத்தையே ஜீவனோபாயத் தொழிலாக மக்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த மக்களுக்கு பல தேவைகள் உள்ளன. அந்த தேவைகளை நிறைவு செய்ய அரசாங்க அதிகாரிகள், பொது நிறுவனங்கள், பொது அமைப்புகள் முன்வருமாறு அன்பாக பணிவாக கேட்டுக் கொள்கின்றோம். பொருளாதார நெருக்கடிநிலை என்பது மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலையிலேயே காணப்படுகின்றது.
இங்கே தீவகத்தை பொறுத்தவரை எங்களுக்கென்று ஒரு சாப்பாட்டு முறை உள்ளது. அதனை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.
ஆனால் தற்பொழுது பொருளாதார நெருக்கடியின் பின்னர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். கூடுதலாக பசி பட்டினியால் பாதிக்க்கப்படுகின்றோம் ஆனால் எங்கள் கௌரவம், மரியாதை என்பவற்றை காப்பாற்றவேண்டும் என்பதற்காக நாங்கள் யாரிடமும் இதனைப் பற்றி தெரியப்படுத்தவில்லை.
ஆகவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு பொது நிறுவனங்கள் தீவக மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கோருகின்றோம். குறிப்பாக புலம்பெயர்ந்துள்ள மக்களால் தீவக மக்களுக்கு உதவி கிடைக்கின்றது. குடும்பத்தில் ஒருவர் வெளிநாட்டில் இருந்தால் அந்த குடும்பத்துக்கு உதவி கிடைக்கின்றது. ஆனால் வெளிநாட்டில் ஆள்கள் இல்லாத குடும்பத்துக்கு எந்தவித உதவியும் கிடைப்பதில்லை.
அரசாங்கம் நிவாரணம் வழங்குகிறது. வெளிநாட்டு அமைப்புகளை நாங்கள் பெரிதாக நம்புவதில்லை. அவர்கள் ஒரு சில உதவிகளை எமது பிரதேசத்தில் செய்துள்ளார்கள்.ஆனால் அவர்களை தொடர்ச்சியாக நம்பியிருக்க முடியாது.
வெளிநாட்டு அமைப்புக்கள் ஓரளவுக்கு தான் எமக்கு உதவி புரிகின்றார்கள். நாளாந்தம் அவர்களின் உதவியை எதிர்பார்க்க முடியாது. நாம் தொழிலுக்கு சென்றால் மாத்திரமே எமது வாழ்வாதாரத்தை முன்கொண்டு செல்ல முடியும்-என்றார். (நன்றி ஈழநாடு)