மின்சாரக் கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டால் இலங்கை பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று பொதுப் பயள்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
அசாதாரண மின் கட்டண உயர்வால் அனைத்துப் பொருள்கள் சேவைகளின் கட்டணங்கள் வரையறையின்றி அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
30 அலகுகளுக்குக் குறைவாக மின்சாரம் உபயோகிப்பவர்கள் தற்போது 360 ரூபா செலுத்தும் நிலையில், மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் அவர்கள் 2 ஆயிரம் ரூபாவைச் செலுத்த நேரிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
30 முதல் 60 அலகுகள் உபயோகிப்பவர்கள் தற்போது 780 ரூபா செலுத்தும் நிலையில், அவர்கள் 3 ஆயிரத்து 310 ரூபா செலுத்த நேரிடும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் ஆலோசனைக் குழு தெரிவித்தது.
தற்போது ஆயிரத்து 800 ரூபா செலுத்துவோர், மின் கட்டண உயர்வுக்குப் பின்னர் 4 ஆயிரத்து 860 ரூபா செலுத்த நேரிடும் என்றும் கூறப்படுகின்றது.
மின் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கையின் கைத்தொழில்துறை வீழ்ச்சி சடுதியாக உணரப்படும் என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் ஆலோசனைக் குழு தெரிவித்தது.