கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்துறை கல்வி அமைச்சர் மற்றும் நாட்டின் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்:
ஒரு வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது முக்கிய இலக்காகவும், 50-60 மாணவர்களுடன் தரமான கல்வி வழங்க முடியாது என்பதையும்.
புதிய கல்வி மறுசீரமைப்பை தென் மாகாண கல்வி அதிகாரிகளிடம் விளக்குவதற்காக நேற்று (ஜூலை 19) காலி தக்ஷினபாய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
இதில் உரையாற்றிய பிரதமர்,
“புதிய கல்வி மறுசீரமைப்புக்காக நீங்கள் வழங்கும் ஆதரவுக்கு முதலில் எனது நன்றியை தெரிவிக்கிறேன். எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே இம்மாற்றங்களை திட்டமிட்டு, நிபுணர்களுடன் ஆலோசித்து, பல தரப்பினரின் கருத்துக்களைப் பெற்றே இந்தக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன.
பாடத்திட்ட மாற்றங்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களின் திறன் மேம்பாடு, கல்வி நிர்வாக அமைப்பின் சீரமைப்பு, உட்கட்டமைப்புப் வசதிகளை மேம்படுத்தல் மற்றும் எல்லா மாணவர்களுக்கும் சமமாக தரமான கல்வி வழங்கும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இது எமது அரசாங்கத்தின் தேவைக்காக அல்ல, நாட்டின் எதிர்காலத்திற்கான பொறுப்பாகும். சமூகத்தில் சிலர் இதனை நேர்மையாக புரிந்துகொண்டு ஆதரிக்கிறார்கள்; சிலர் தவறாக புரிந்து விமர்சிக்கிறார்கள்; மற்றவர்கள் அரசியல் நோக்கில் விமர்சிக்கிறார்கள்.
இந்த மாற்றம் சவாலான ஒன்றாக இருந்தாலும், அதை தவிர்க்க முடியாது. மக்கள் நம்பிக்கையுடன் எம்மைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்ததற்கான ஒரு பணி இது.
பல்வேறு வேலைகள் எங்களைக் காத்திருக்கின்றன. 16 ஆண்டுகளாக மாற்றப்படாத ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் பாடத்திட்டங்களை புதுப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்றுநர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கும்,” என தெரிவித்தார்.
மேலும், நிகழ்வில் கருத்து தெரிவித்த உயர்கல்வி இருதையமைச்சர் திரு. நலின் ஹேவாகே கூறுகையில்,
“புதிய கல்வி மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, தொழில்துறை கல்வியை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேர்ச்சி பெறாத மாணவர்கள் தொழில்துறை கல்விக்கு மாற்றமாக, அவர்களின் திறமை மற்றும் ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு பாடசாலையில் இருந்தே தொழில்துறை கல்வியை கௌரவமாகக் கற்றுக்கொள்ளும் சூழல் ஏற்படுத்தப்படும்,” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஷ்சந்திர, நிஹால் கலப்பத்தி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ, தென் மாகாண பிரதம செயலாளர் சுமித் அலஹகோன், கல்வி அமைச்சு, பரீட்சைத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவனம், தென் மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.