புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட பகுதியில் வாழும் மக்களின் சூழல் மக்களின் இயல்பு வாழ்வுக்கு ஏற்றதொன்றாக இல்லாமையால் அப்பகுதியில் வாழும் மக்களது நலன்கருதி மாற்று இடம் ஒன்றை ஏற்பாடு செய்து அவர்களை மீள் குடியேற்ற நடவடிக்கை எடுப்பதற்கு வேலணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அண்மையில் நடைபெற்ற நிலையில் குறித்த பகுதியில் வாழும் மக்களின் நலன்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது அவ்விடையம் குறித்து பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அப்பகுதி வாழ் மக்கள் போன்றோர் பல்வேறு ஆரோக்கியமான கருத்துக்களையும் ஆலோசனைககையும் முன்வைத்திருந்தனர்.
குறித்த ஆலோசனைகளின் படி அப்பகுதி மக்கள் வாழிடத்தை கட்டமைப்பதை விட பிறிதோர் இடத்தில் அம் மக்களை குடியேற்றுவதால் வீண் நிதி விரையத்தை கட்டுப்படுத்துவதுடன், மக்களது வாழ்வியல் சூழலையும் சிறப்பாக உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற ஆலோசனை கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, அதை நடைமுறைப் படுத்துவதற்கான பொறிமுறையை ஏற்படுத்துமாறும் ஒருங்கிணைப்புக் குழு தலைவரால் துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதையடுத்து பிரதேச செயலர் அதை நடைமுறைப்படுத்த இரு மாத அவகாசம் வேண்டும் என்று கோரியிருந்த நிலையில் அதற்கான அவகாசம் வழங்கவும் அறிவுறுத்தியிருந்தார்