கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவுப் பகுதிக்கு கசிப்பை கடத்தி வந்து விற்பனை செய்பவர்களால் புங்குடுதீவுப் பகுதியில் உள்ள இளைஞர்கள் கசிப்புக்கு அடிமையாகி வருவதாகவும் இவ்வாறு தொடர்ச்சியாக கசிப்பு அருந்தியதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மரண விசாரணையின் போது தெரிவிக் கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு நாலாம் வட்டாரத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் டனிஸ்ரன் (வயது-22) என்ற இளைஞர் கடந்த 29 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் இரத்த வாந்தி எடுத்த நிலையில் யாழ். போதான வைத்தியசாலையில் பிற்பகலில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு 7:45 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டார்.
இதன்போது அவரின் உறவினர்களி டம் வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் புங்குடுதீவுப் பகுதியில் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாகவும் கசிப்பை கிளிநொச்சியில் இருந்து கடத்திவந்து புங்குடுதீவு பகுதிகளில் விற்பனை இடம் பெறுவதாகவும் இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு முறைப்பாடு செய்தால் பொலிசார் அவர்களை பிடித்து விட்டு பின்னர் விடுவிப்பதாகவும் இதன்கார ணமாக அப்பகுதி இளைஞர்கள் கசிப்பை அருந்தி வருவதாகவும் மரண விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் பிரேத பரிசோதனையில் தினமும் கசிப்பு அருந்தியதால் ஈரல் பழுதடைந்து இரத்த வாந்தி எடுத்து மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
நன்றி தினக்குரல்