வேலணை – புங்குடுதீவு – இறுப்விட்டி பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாகத்தினரூடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக நேற்று புதி இலங்கைப் போக்குவரத்து சபை பேருந்து சேவை இறுப்பிட்டி அரியனார் பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் மருதயினார் ஜெயகாந்தன் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக பொறுப்பாளர் சின்னையா சிவராசா வேலணை பிரதேச உதவி நிர்வாக பொறுப்பாளர் திருமதி அனுசியா ஜெயகாந்த் ஊர்காவற்றுறை பிரதேச உதவி நிர்வாக செயலாளர் புவி உள்ளிட்ட கட்சியின் பல பிரமுகர்களின் பிரசன்னத்துடன் குறித்த சேவை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கடந்த 35 வருடங்களுக்கு முன்னர் குறித்த மார்க்கமூடாக சேவை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாராண சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையால் மாணவர்கள் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளர்கள் பொதுமக்கள் என பலரும் பல்வேறு அசௌகரியங்களை நாளந்தம் சந்தித்துவந்திருந்த நிலையில் இன்றையதினம் குறித்த சேவையை தமக்கு ஏற்படுத்தி தந்தமைக்காக குறித்த பகுதி மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தமது நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.