பனித்துளியில் ஒரு வெப்பம்’ நூல் வெளியீட்டு விழா

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read
ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய நெடுந்தீவு பவி ஆக்கிய ‘பனித்துளியில் ஒரு வெப்பம்’ நூல் வெளியீட்டு விழா.
பனி குளிர்ச்சியின் குறியீடு, வெப்பம் சிதைப்பின் அடையாளம். முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி ஆசிரியரும், படைப்பாளருமாகிய நெடுந்தீவு பவி என அறியப்படும் அ.பவிக்குமார் படைத்த ‘பனித்துளியில் ஒரு வெப்பம்’ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது, 25.09.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 09.45 மணிக்கு, ஈழத்தின் யாழ்ப்பாணம் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
நிகழ்வானது நூலாசிரியரின் தந்தையார் லீ.அமலதாஸ் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக நெடுந்தீவு உதவிப் பிரதேச செயலர் கெல்ஸ்மன் பங்கேற்றார்.
முன்னதாக விருந்தினர்கள், பங்கேற்பாளர்கள் வரவேற்பு இடம்பெற்றது. பொதுச்சுடர் ஏற்றல், அகவணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தினை மாணவிகளான துசானா, கலைச்செல்வி, துவாரகா ஆகியோர் இசைத்தனர். இறைவணக்க இசையினை யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் கோகுலன் சாகித்தியன் இசைத்தார். தொடர்ந்து கலைச்செல்வி, துவாரகா ஆகியோர் இசைத்தனர். வரவேற்பு நடனத்தினை யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலை மாணவி கோகுலன் கேசவி நிகழ்த்தினார்.
அறிவிப்பாளர் நெடுந்தீவு சபேசன் அவர்களின் நிகழ்ச்சித் தொகுப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வரவேற்புரையினை ஆசிரியர் எஸ்.ஜே.ஆதி வழங்கினார். ஆசியுரையினை யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் திருமதி.உதயகுமார் வழங்கினார். நூலாசிரியருக்கு கற்பித்தவரும், யாழ்.சைவப்பிரகாச வித்தியாலய பிரதி அதிபருமாகிய ஏ.பீலிக்ஸ் ஜேக்கப் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வின் சிறப்பு விருந்தினரான முள்ளியவளை வித்தியானந்த கல்லூரி முன்னாள் அதிபர் பி.கே.சிவலிங்கம் நூலாசிரியரின் படைப்புலக பயணத்தின் பதிவுகளை பகிர்ந்துகொண்டார்.
நூலின் வெளியீட்டுரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார். நூலினை நெடுந்தீவு உதவிப் பிரதேச செயலர் வெளியீடு செய்ய, முதற்பிரதியினை அமலதாஸ் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நூலாசிரியருக்கான மதிப்பளிப்பினை, திருவள்ளுவரின் சிலையினை பல்லக்கில் ஏற்றி புலம்பெயர் மண்ணில் பெருமைப்படுத்தியவரும், தனித்தமிழ் பயன்பாடு, தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றிற்கான தொடர் முன்னெடுப்புக்களை மேற்கொள்பவருமான சுவிட்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலை முதல்வர் ‘பூநகரியான்’ என்கின்ற, திரு. பொன்னம்பலம் முருகவேள் அவர்கள் சார்பாக, திருவள்ளுவர் நற்பணி மன்றத்தின் நிறுவுநர் க.நவரத்தினம் அவர்கள் வழங்கினார். பொன்னம்பலம் முருகவேள் அவர்களின் ஒழுங்கமைப்பில் பூநகரி பிரதேசத்திலுள்ள பத்துப் பாடசாலைகளுக்கு வழங்குவதற்காக ‘பனித்துளியில் ஒரு வெப்பம்’ நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டு நூலாசிரியருக்கு ஊக்குவிப்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பங்கேற்பாளர்கள் நூற்பிரதியை பெற்றுக்கொண்டனர். நூலின் நயவுரையினை யாழ்ப்பாணம் தேசிய தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி.எஸ்.பத்மராஜா நிகழ்த்தினார். நிகழ்வில் சிறப்பம்சமாக விழிப்புலனற்ற இசைக்கலைஞர் ரி.மிதுசன் அவர்களின் அன்னை பற்றிய பாடலும் இடம்பெற்றது.
இவ்வாண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் பிறையில் முறையில் பரீட்சை எழுதி 3A சித்தி பெற்ற வாழ்வக மாணவி உசா கேசவன் அவர்கள் நிகழ்வில் மதிப்பளிக்கப்பட்டார். இம்மாணவி மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும்,
தேசிய மட்டத்தில் 22ஆம் இடத்தினையும் பெற்றிருந்தார்.
பிரதம அதிதி உரையினைத் தொடர்ந்து ஏற்புரையுடனான நன்றிப் பகிர்வினை நூலாசிரியர் நெடுந்தீவு பவி வழங்கினார்.
நூலாசிரியரான நெடுந்தீவு பவி அவர்கள் யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரியில் கற்றுக்கொண்டிருக்கும்போது ‘நான் பார்த்த உலகம்’ நூலினை வெளியீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this Article