வடக்குக்கு நீர் வழங்குவதில் கவனம் செலுத்தி யாழ்ப்பாணத்துக்கு நதி ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
நீர்ப்பாசன அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் நேற்று(டிசம்பர் 11) பாராளுமன்றத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“யாழ்ப்பாண நதி” என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் முதற்கட்ட ஆய்வுகள் நெதர்லாந்து அரசால் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த கட்டப் பணிகள் 2024ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் வடக்கின் நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என நம்பப்படுகின்றது என்றும் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்தார்.
முடங்கிக் கிடக்கும் யாழ்ப்பாணம் அணைக்கட்டுத் திட்டம் அடுத்த ஆண்டு மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் கீழ் இத்திட்டத்தின் ஆரம்பகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், 2024ஆம் ஆண்டு மீண்டும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
வடக்குப் பகுதியைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகளை அதிகபட்சமாகப் பயன்படுத்த முடிந்தது என்றும் அவர் கூறினார்.
கடந்த பருவத்தில் நீர்ப்பாசனத் துறை பெரிதும் வளர்ச்சியடைந்தது. நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இலங்கையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
நீர்ப்பாசன அமைச்சின் சில திட்டங்களால் குறிப்பாக யானைகள் அதன் வாழ்விடங்களை இழந்துள்ளன. அந்த விலங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த யானைகள் கிராமங்களுக்கு நுழைகின்றன. ஒரு அமைச்சு என்ற ரீதியில் இந்தப் புரிந்துணர்வுடன் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் ஏனைய அமைச்சுக்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.