நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றிய மருந்தாளர் சுகயீன விடுமுறையில் சென்ற காரணத்தால் சிகிச்சைக்கு வரும் வெளி நோயாளர்களுக்கு மருந்துகள் வழங்கப்படாமல் திருப்பி அனுப்பிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆறு மாதங்களுக்கு ஒரு மருந்தாளர் என்ற சுழற்சி முறை அடிப்படையில் வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றும் வகையிலேயே நெடுந்தீவு வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள நிலையில் சுகயீன விடுமுறைக்கான பதிலாள் ஒருவர் நியமிக்கப்படாமையால் இந்நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மருந்தாளர் விடுமுறையில் செல்லும் போது வைத்தியசாலை பணியிலுள்ள மூத்த பரிசாரகர்கள் இக்கடமையினை மேற்கொண்டதாகவும், இருந்தபோதும் இதனால் ஏற்படும் தவறுகளால் நோயாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுமாயின் அது பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும் என்பதால் மருந்து வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை மருந்தாளர் இன்மையால் தேவையான மருந்துகள் தொடர்பில் சிட்டை வழங்கப்படுமெனவும் அதற்கான மருந்தினை வெளியிடங்களில் பெறலாம் எனவும் அல்லது விடுதியில் தங்கி சிகிச்சை பெறலாம் எனவும் நோயாளர்களுக்கு வெளிநோயாளர் பிரிவில் தெரிவிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வடபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூடிய கவனமெடுத்து நோயாளர்கள் பாதிக்கப்படாத வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.